ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்


ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 7:30 PM GMT (Updated: 13 July 2023 7:30 PM GMT)

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. அதன்படி 9-வது நாளாக நேற்று கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் வள்ளியக்காவலசு கோபால்சாமி முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு, திருப்பூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் அம்சவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். நூதன முறையில், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, இறந்து போனதை போல விவசாயி ஒருவரை நாற்காலியில் அமர வைத்து, அவருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் சாமியாடியபடி சாட்டையால் அடித்து கொண்டு விவசாயி ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றார். வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். கள்ளிமந்தையம் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க நிலம் எடுத்ததற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Related Tags :
Next Story