மணல் ஏற்றி சென்ற லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டம்


மணல் ஏற்றி சென்ற லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 15 May 2023 7:15 PM GMT (Updated: 15 May 2023 7:15 PM GMT)

விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மணல் ஏற்றி சென்ற லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

விழுப்புரம்- நாகை 4 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி மணல் ஏற்றி சென்ற லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 வழிச்சாலை அமைக்கும் பணி

விழுப்புரத்தில் இருந்து நாகை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த 4 வழிச்சாலைக்காக நாகை அருகே உள்ள பனங்குடி, முட்டம், மரைக்கான்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்தினர். .

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதால் இழப்பீடுத் தொகையை நில உரிமை தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்தனர். ஆனால் பரிந்துரை செய்தபடி இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

லாரிகளை மறித்து போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் நேற்று நாகூர் அருகே பனங்குடி பகுதியில் நடந்த சாலை பணியினை தடுத்து நிறுத்தினர். மேலும் சாலை பணிகளுக்காக பனங்குடி ஏரியில் இருந்து மணல் ஏற்றி வந்த 20-க்கும் அதிகமான லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பரிந்துரை செய்த கூடுதல் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கலெக்டரின் உத்தரவை ஏற்காத தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பணிகள் பாதிப்பு

மணல் ஏற்றி வந்த லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதை அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் அங்கு சென்று விவசாயிளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story