அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்


அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்
x

ஒரத்தநாடு அருகே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயிகள் சாலை மறியல்

தஞ்சை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த சமீபத்திய தொடர் கனமழையில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்களும், மானாவாரி பயிர்களும் பெரும் அளவில் சேதமடைந்தது.

இந்த நிலையில் சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் கணக்கெடுப்பு பணி நடத்தவில்லை என்றும், இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேத விவரங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ரூ.40 ஆயிரம் நிவாரணம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் தஞ்சை மாவட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் விவசாயிகள் கையில் அழுகி சேதம் அடைந்த நெற்பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது, கனமழையால் பாதிக்கப்பட்ட சாகுபடி நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேத மதிப்பீடுகளை உடனடியாக கணக்கிட்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை பெற்று தரக்கோரியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். இதை அறிந்த திருவோணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த பேச்சுவார்த்தையின்போது கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை-திருவோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story