தக்காளியை பயிர் செய்தால் நஷ்டம் என்று 'சாகுபடி அளவை குறைத்த பின்னர் விலை ஏறிவிட்டதே'- தாளவாடி விவசாயிகள் வேதனை


தக்காளியை பயிர் செய்தால் நஷ்டம் என்று சாகுபடி அளவை குறைத்த பின்னர் விலை ஏறிவிட்டதே- தாளவாடி விவசாயிகள் வேதனை
x

தக்காளியை பயிர் செய்தால் நஷ்டம் என்று சாகுபடி அளவை குறைத்த பின்னர் விலை ஏறிவிட்டதே என்று தாளவாடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

தக்காளியை பயிர் செய்தால் நஷ்டம் என்று சாகுபடி அளவை குறைத்த பின்னர் விலை ஏறிவிட்டதே என்று தாளவாடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தாளவாடி கிராமங்களில்...

தாளவாடி அதன் சுற்றுவட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைக்கோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடுவார்கள்.

குறிப்பாக ஆண்டு தோறும் சுமார் 300 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தக்காளி விலை குறைந்ததால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு பயிர் செய்வதை விவசாயிகள் குறைத்துவிட்டனர். தாளவாடி மலை கிராமங்களில் இந்த ஆண்டு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்துவிட்டது.

இதுபற்றி தாளவாடி மலைகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

3 ரூபாய்க்கு கேட்டனர்...

தாளவாடி ஒசூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கட்:-

நான் ஆண்டுதோறும் தக்காளி தான் சாகுபடி செய்து வந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களாக விலை உயராததால், சாகுபடி செலவு கூட கிடைக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு தக்காளி விலை உயர்ந்துள்ளது. நாங்கள் பயிர் செய்தபோது ஒரு கிலோ தக்காளியை 3 ரூபாய்க்கு வியாபாரிகள் கேட்டனர். இப்போது கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். நாங்கள் என்ன செய்வது?.

சாகுபடியை நிறுத்திவிட்டேன்

ராமாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்:-

ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ரூ.80 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை செலவு ஆகிறது. நான் ஆண்டுதோறும் 3 அல்லது 4 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்வேன். ஆனால் தொடர்ந்து விலை குறைந்ததால் சாகுபடி செய்வதை நிறுத்தி விட்டேன். என்னைப்போல பல விவசாயிகள் தாளவாடி பகுதியில் தக்காளி பயிரிடுவதையே நிறுத்திவிட்டனர். தாளவாடியில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் இதே கதிதான்.

ஏமாற்றம் அளிக்கிறது

தொட்டகாஜனூரை சேர்ந்த விவசாயி குணசேகரன்:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ 3 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து விலை குறையும் என்று நினைத்து விவசாயிகள் பலர் வேறு பயிர்களை சாகுபடி செய்துவிட்டனர். ஆனால் இப்போது தக்காளி விற்கும் விலையை பார்த்தால் ஏமாற்றம் அளிக்கிறது. தக்காளி சாகுபடி அளவு குறைந்ததே அதன் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விலை நிர்ணயம்

தாளவாடி பகுதியை சேர்ந்த விவசாய ஆர்வலர்கள் கூறும்போது, 'கோவை, சென்னை, ஈரோடு பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். விலை குறைந்து தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் தான் பல விவசாயிகள் கடனாளியாகியுள்ளனர். இதனால் இந்த ஆண்டு தக்காளி சாகுபடி செய்வதை தவிர்த்துவிட்டனர். இதன் காரணமாக தேவை அதிகரித்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வியாபாரிகள் தோட்டத்துக்கு நேரில் வந்து ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை கொள்முதல் செய்தனர். அதை மார்க்கெட்டுகளிலும், கடைகளிலும் கிலோ 30 ரூபாய்க்கு விற்றனர். இப்போது தோட்டத்துக்கு வந்து கிலோ 75 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். ஈரோடு, கோவை பகுதிகளுக்கு கொண்டு சென்று கிலோ 140 ரூபாய்க்கு விற்கின்றனர். வியாபாரிகளுக்குதான் விவசாயத்தில் லாபம். விவசாயிகளுக்கு கடன்தான் மிஞ்சுகிறது. அதனால் தமிழக அரசு விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை நிர்ணயம் செய்யவேண்டும்'. என்றனர்.


Next Story