கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


கால்வாய்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x

வெம்பக்கோட்டை அணையில் இருந்து செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அணையில் இருந்து செல்லும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெம்பக்கோட்டை அணை

வெம்பக்கோட்டை அணையில் இருந்து பாசனத்திற்காக இடது கால்வாய், வலது கால்வாய் 16 கி.மீ. தொலைவு வரை சிமெண்டு கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.

இடது கால்வாயில் வெம்பக்கோட்டை, சேதுராமலிங்கபுரம், சல்வார் பட்டி, இரவார்பட்டி, சங்கரநத்தம், படந்தால், வலது கால்வாயில் பந்துவார்பட்டி, பனையடிப்பட்டி, சூரங்குடி, ஒத்தையால், கோட்டப்பச்சேரி, மேட்டுப்பட்டி, உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்.

விவசாய பணிகள்

தற்போது சிமெண்டு கால்வாயில் கற்களை மர்மநபர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆதலால் இந்த கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது 5 கி.மீ. தூரம் கூட தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாய நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.

2,500 ஏக்கர் நெல் பாசனம் செய்யக்கூடிய இப்பகுதியில் தற்போது 300 ஏக்கர் கூட நெல்பாசனம் செய்யாத முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். கால்வாயின் வழித்தடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதால் விளைநிலங்கள் தரிசாகிவிட்டன. ஆதலால் விவசாயிகள் வேறு வேலைக்கு சென்று விட்டதால் விவசாய பணிகள் பெருமளவு குறைந்து விட்டது.

சிமெண்டு கற்கள்

இதுகுறித்து வல்லம்பட்டி விவசாயிகள் ராஜாராம், தமிழாகரன் கூறியதாவது:-

வெம்பக்கோட்டை அணையில் இருந்து 16 கி.மீ. தூரம் நன்செய், புன்செய், நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்காக பொதுப்பணி துறை சார்பில் இடது கால்வாய், வலது கால்வாய், அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் கால்வாயில் உள்ள சிமெண்டு கற்கள் முழுமையாக திருடப்பட்டு வீடுகளுக்கு தளம்பதிக்கவும், வாசற்படி அமைக்கவும் சிலர் பயன்படுத்தி விட்டதால் கால்வாய்கள் இருந்த இடம் தெரியாமல் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பெரும்பகுதி வருவதில்லை.

பலன் இல்லை

இதுகுறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. இந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் தரிசாக மாறியதால் பட்டாசு ஆலைகள் பெருகி கொண்டிருக்கின்றன.

முழுமையாக விவசாயம் அழிவதற்குள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாய்களில் சிமெண்டு கற்களை மீண்டும் பதிக்கும் பணியை உடனடியாக தொடங்கினால் விவசாயம் செழிப்பாக நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story