பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்


பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 9:37 AM GMT)

பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பதிவு செய்யலாம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன் பெற விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நுண்ணீர் பாசனத்திட்டம்

நுண்ணீர் பாசனம் ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும், திறம்படவும் பயன்படுத்தும் சீரிய தொழில்நுட்பம் ஆகும். குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம்.

அதற்கு பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் வழிவகை செய்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டுத்திறன் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கிறது. மகசூல் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்த தொழில் நுட்பம் மூலம் உரங்களையும் பாசனநீர் வழியாக செடியின் வேர்பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உரப்பயன்பாடு 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் பாசனநீர் சிக்கனமாக பயன்படுத்துவதோடு உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தப்படுகிறது.

தெளிப்புநீர் பாசனம்-மழை தூவான்

இந்த திட்டத்தில் வேளாண் பயிர்களான தென்னை, கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய், பனை ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும், நிலக்கடலை, எள், உளுந்து மற்றும் பயறு ஆகிய பயிர்களுக்கு தெளிப்புநீர் பாசனம் அல்லது மழை தூவான் அமைத்துக்கொள்ளலாம்.

அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் இவை வழங்கப்படுகிறது. 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதி பங்கு தொகையை இணையவழி மூலமாக தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீர் பாசன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

வலைதளம் மூலம் பதிவு செய்யலாம்

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்-2, நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது வலைதளத்தின் மூலமாகவோ நேரடியாகவோ பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story