தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்றும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்
தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்றும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் என வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தரிசு நிலங்களை வேளாண் நிலமாக மாற்றும் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் என வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரிசு நிலங்கள்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும், வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும், இந்த திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயல்படுத்தும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது.
முதல்-அமைச்சரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக மாற்றப்படுகிறது.
மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை உள்ளது.
நடப்பு ஆண்டில் இத்திட்டம் தமிழகத்தில் 3,204 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
பயனடையலாம்
இத்திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியில் உழவன் செயலியில் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவேற்றம் செய்த விவரங்களை துறை அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்ெகாண்டு ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைத்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆகவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடையலாம்.
விவசாயிகள் இத்துறை நலத்திட்டங்களில் பயனடைய https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme-register என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து இணைந்திடலாம்.
கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.