அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்


அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
x

அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

மயிலாடுதுறை

சீர்காழி அருகே கடல்நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

உப்பனாற்று கரைகள் உடைப்பு

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. கனமழையால் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாசல், ராதாநல்லூர், வழுதலைக்குடி, எடமணல், வருஷபத்து உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையாலும், கடலின் சீற்றம் அதிகரித்ததால் வலுவிழந்த உப்பனாற்று கரைகள் உடைக்கப்பட்டு கடல் நீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

விவசாயிகள் சாலைமறியல்

இதனால் திருமுல்லைவாசல், ராதாநல்லூர், விடுதலைக்குடி, வருஷப் பத்து உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்திருந்த சம்பா நெற்பயிர்கள் கடல் நீரால் முழுகி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட வராததை கண்டித்தும், உப்பனாற்று கரைகளை பலப்படுத்தாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் திருமுல்லைவாசல் சாலை வழுதலைகுடி என்ற இடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உப்பு நீர் விளைநிலங்களுக்குள் புகாத வகையில் பொதுப்பணித்துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி-திருமுல்லைவாசல் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story