காவிரி ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம்


காவிரி ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x

காவிரி ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகா அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான காவிரி தண்ணீரை பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி சிந்தாமணி அண்ணா சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் 36-வது நாளான நேற்று விவசாயிகள் திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் காந்தி படித்துறை அருகே ஆற்றின் நடுப்பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி வெங்காய பயிர்களை நடவு செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல்அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் ஆற்றை விட்டு வெளியே வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். ஆனால் விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அல்லது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் காவிரி ஆற்றிலேயே போராட்டத்தை தொடர்வோம் என்றனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு படகு மூலம் ஆற்றுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 விவசாயிகளை கைது செய்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story