நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்


நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்
x

நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரம்

திருவாரூர்

கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த மழையில் நனைந்த நெல்லை காயவைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகி்ன்றனர்.

குறுவை சாகுபடி பணிகள்

டெல்டா மாவட்டங்களில் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவது விவசாயம் மட்டுமே. பெரும்பாலும் அதனை நம்பியே அப்பகுதி மக்கள் வாழ்கின்றனர். நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற பயிர்களை ஆண்டு தோறும் சாகுபடி செய்து வருகின்றனர். அதில் அறுவடை செய்த மகசூலை பொறுத்தே அவர்களது வாழ்வாதாரமும் அமைகிறது. இந்த சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ந் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டு பாசனத்திற்காக முன்கூட்டியே மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஆறுகளில் தட்டுப்பாடு இன்றி சென்றதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் முதல் போக சாகுபடியாக குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

மழையில் நெல்கள் நனைந்தது

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்தனர். இதில் குறுவை நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. இதனால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய ஆயத்தமாகி வந்தனர். இந்தநிலையில் பருவம் தவறி பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்தனர். பின்னர் வெயில் அடித்ததும் வயலில் சாய்ந்து கிடந்த நெற்பயிர்களை எந்திரம் மூலம் அறுவடை செய்தனர். ஆனாலும் மீண்டும் மழை தொடர்ந்தது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்கள் மீண்டும் மீண்டும் நனைந்தது. நனைந்த நெல்களை சாலை மற்றும் தளங்களில் கொட்டி காய வைக்கும் பணிகளில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டனர். கூத்தாநல்லூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல்களை காயவைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

காயவைக்கும் பணி

இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில்,

இந்த ஆண்டு குறுவை நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் தந்துள்ளது. ஆனால், அறுவடை நேரத்தில் பெய்த மழையால் நெல்கள் நனைந்து விட்டன. இதனால் 25 சதவீதம் நெல்களில் ஈரப்பதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் மட்டுமே உள்ள நெல்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதனால் ஈரப்பதம் அதிகம் இல்லாமல் இருக்க நனைந்த நெல்களை தொடர்ந்து காய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம் என்றனர். இந்தநிலையில் நேற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.


Next Story