குடும்ப தகராறு: ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறு: ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாம்உசேன் (வயது 38). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சர்மிளா (30) என்பவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சதாம் உசேனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் சர்மிளா தனது குழந்தைகளுடன் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனம் உடைந்த சதாம் உசேன், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேற்று காலை போலீசார் சென்றனர். பின்னர் சதாம் உசேனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைபோல் திருவாலங்காடு அடுத்த வியாசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஆந்திர மாநிலம் குண்டக்கல் பகுதியில் ரெயில்வே ஆஸ்பத்திரியில் ஓப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக ரமேஷ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுச் வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரமேஷ் தனது அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி வனிதா திருவாலங்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story