பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு வராமலேயே புகார் மீதான நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தகவல்


பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு வராமலேயே புகார் மீதான நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு வராமலேயே புகார் மீதான நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

பெரம்பலூர்

கண்காணிப்பு மையம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார் மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில், மனு விசாரணை கண்காணிப்பு மையம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், கண்காணிப்பு மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்த மையத்தில் கணினி மென்பொருள் மூலம், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மனு அளிக்க வரும் மனுதாரர்களின் முகவரிகள் அடங்கிய முழு தகவல்கள் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்களால் பதிவேற்றம் செய்யப்படும். மனுதாரர்களை போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் வரவேற்பாளர்கள் எவ்வாறு வரவேற்றார்கள் என்பதையும், அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டார்களா? என்ற விவரங்கள் மென்பொருள் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

விவரங்கள் பதிவேற்றம்

மனுதாரர்கள் எந்த பிரச்சினை சம்பந்தமாக புகார் அளித்துள்ளனர். அவர்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் மேற்பார்வையிடப்படும். போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் நிலைய வரவேற்பாளர்கள், மனுதாரர்களிடம் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை மனு விசாரணை கண்காணிப்பு மையத்தின் மூலம் ெசல்போனில் தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிந்து கொள்ளலாம். மனுதாரர்கள் அளித்த புகாருக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளதா? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

மனுதாரர்கள் போலீஸ் நிலையத்துக்கு எத்தனை முறை வந்துள்ளனர் என்ற தகவல் பதிவு செய்யப்பட்டு, அந்த தகவல்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இந்த மென்பொருள் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு எத்தனை மனுதாரர்கள் வருகிறார்கள்? எத்தகைய குற்றங்கள் தொடர்பான மனுக்கள் அதிகம் பதிவாகிறது என்பதை அறிந்து கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இனி வரும் காலங்களில், போலீஸ் நிலையங்களுக்கு வராமலேயே அளித்த புகாரின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிசாமி, வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story