நகை, பணம் பறிப்பு


நகை, பணம் பறிப்பு
x

பெண்ணிடம் நூதன முறையில் நகை, பணம் பறிப்பு

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் முனைஞ்சிபட்டி அருகே உள்ள வடக்கு பாப்பாங்குளம் அம்மன் கோவில் நடுத்தெருவை சேர்ந்தவர் நம்பி. இவருடைய மனைவி பேச்சியம்மாள் (வயது 65). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு கண் ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தார். பின்னர் பஸ்சில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறி அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் பேச்சியம்மாளிடம், உங்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வாங்கி தருகிறேன், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வாருங்கள் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் இவ்வளவு நகைகள் அணிந்திருந்தால் உதவித்தொகை தரமாட்டார்கள் என்று கூறி கழுத்தில் கிடந்த செயின், கம்மலை கழற்றி கொடுங்கள் என்று வாங்கி உள்ளார். பின்னர் ரூ.1,500-யையும் வாங்கினார்.

அதைத்தொடர்ந்து ஒரு கையெழுத்து மட்டும் போட வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை.

அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த பேச்சியம்மாள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விவரத்தை கூறினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் குறிப்பிட்ட பெண்ணை தேடினார்கள். ஆனால் அந்த பெண் அதற்குள் மாயம் ஆகிவிட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சியை கைப்பற்றியும் விசாரித்து வருகின்றனர்.


Next Story