பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளி உடல் சிதைந்து பலி
திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதைந்து பலியானார். கட்டிடம் தரைமட்டமானது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதைந்து பலியானார். கட்டிடம் தரைமட்டமானது.
வெடித்து சிதறியது
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை குமரன்விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50). விவசாயியான இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அணைக்கரையில் உள்ள தனது தோட்டத்தில் உரிமம் பெற்று வாணவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
நேற்று மாலையில் அங்கு உடன்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் (35) வாணவெடி தயாரித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வாணவெடிகள் வெடித்து சிதறியது.
தொழிலாளி பலி
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தார். வாணவெடிகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. கட்டிட கற்கள் சிதறியதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பூவுடையார்புரத்தைச் சேர்ந்த தொழிலாளி பாலா என்பவரும் காயமடைந்தார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, காயமடைந்த பாலாவை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ராஜ்குமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், திசையன்விளை தாசில்தார் பத்மபிரியா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.