பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று தஞ்சையில் நடந்த மாநாட்டில் அகில இந்திய காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா கூறினார்.
2 நாள் மாநாடு
காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட 2 நாள் வைரவிழா மாநாடு தஞ்சையில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு சங்கத்தின் தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். அகில இந்திய காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் கிரிஜா, தென் மண்டல காப்பீட்டுக்கழக ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநாட்டை அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
சீர்குலைக்கப்பட்டு வருகிறது
நம் முன்னோர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை 1956-ம் ஆண்டு உருவாக்கினர். இதன் மூலம் நம் நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனம் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துள்ளது.
இந்தியா சுயசார்பு நிலையை அடைந்ததற்கு பொதுத்துறை நிறுவனங்களும் முக்கிய காரணம். தற்போது இந்தச் சுயசார்பு தன்மை சீர்குலைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மயம்
காப்பீட்டு துறையை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, மின் துறை உள்ளிட்டவையும் தனியார்மயமாக்கப்படுகிறது. இதேபோல, விண்வெளி, அணு ஆராய்ச்சியும் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நிகழ்கிறது. தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தையும் பொதுப்பங்குகள் வெளியீட்டின் மூலம் தனியார் மயமாக்க அரசு முனைந்துள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நிர்வாகத் திறமையின்மை காரணமாக பண மதிப்பிழப்பு, பல மடங்கு நிர்ணயிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டது. இதேபோல காப்பீட்டு துறையையும் சீர்குலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்து போராட வேண்டும்
மிக வலிமையான நிறுவனமான எல்.ஐ.சி.யின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.39 லட்சம் கோடி. இது, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். 60 ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் பாடுபட்டு இந்நிறுவனத்துக்கு நன்மதிப்பை உருவாக்கியுள்ளோம்.
எனவே எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை காப்பாற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள தோழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் சேதுராமன் வரவேற்றார். முடிவில் சங்கபொருளாளர் ரவிசங்கர் நன்றி கூறினார்.