ஈரோடு: பவானி கூடுதுறை காவிரி அற்றில் இறங்க, குளிக்க, திதி, தர்பணம் கொடுக்க தடை


ஈரோடு: பவானி கூடுதுறை காவிரி அற்றில் இறங்க, குளிக்க, திதி, தர்பணம் கொடுக்க தடை
x

கோப்புப்படம்

வெள்ள அபாய எச்சரிக்கையை தொடர்ந்து பவானி கூடுதுறையில் இறங்க தடை விதிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஈரோடு,

முக்கிய புண்ணிய தலங்களில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையும் ஒன்றாகும். அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார தலமாக விளங்குவதால் பவானி கூடுதுறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் அங்கு எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும். கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து புனிதநீராடிவிட்டு, சங்கமேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

இதனிடையே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டிய நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல பவானிசாகர் அணை 101 அடியை எட்டியுள்ளதால் உபரி நீர் ஆற்றில் திறக்கபட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வருவதால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டுள்ளார்.


Next Story