இடர்பாடின்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்க - எடப்பாடி பழனிசாமி


இடர்பாடின்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்க - எடப்பாடி பழனிசாமி
x

கோவில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முத்துமாரியம்மன் திருக்கோவில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஏற்கனவே, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் தேரின் வடம் தேரோட்டத் திருநாளான 21.06.2024 அன்று நான்கு முறை அறுந்த சம்பவம், பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் கோவில்களின் சிறப்புவாய்ந்த தேர்களை சரிவர பராமரிக்காத திறனற்ற தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, கோவில் மற்றும் கோவில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொண்டு, பக்தர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்யுமாறு தி.மு.க. அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story