நாகையில் இருந்து இலங்கைக்கு, என்ஜினீயரிங் மாணவர் சைக்கிள் பயணம்


நாகையில் இருந்து இலங்கைக்கு, என்ஜினீயரிங் மாணவர் சைக்கிள் பயணம்
x

நாகையில் இருந்து இலங்கைக்கு, என்ஜினீயரிங் மாணவர் சைக்கிள் பயணம்

நாகப்பட்டினம்

புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக என்ஜினீயரிங் மாணவர் நாகையில் இருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

நாகை ஆரிய நாட்டு தெருவை சேர்ந்தவர் ஹரிஹர மாதவன்(வயது 21). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், புவிவெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் 2,200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

இதேபோல் இலங்கை முழுவதும் தனது விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். இதற்காக நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை ஹரிஹர மாதவன் நேற்று தொடங்கினார்.

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு அவசியம்

இதுகுறித்து ஹரிஹர மாதவன் கூறும் போது, தற்போது உள்ள காலகட்டத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. சிறிது தூரம் செல்ல வேண்டும் என்றாலே நாம் மோட்டார் சைக்கிளையும், காரையும் தான் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைவது மட்டுமல்லாமல் புவி வெப்பமடைகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

எனவே புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், எதிர்கால சந்ததியினர் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். இதற்காக இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன் என்றார்.


Next Story