செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு


செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
x

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், கோர்ட்டு உத்தரவுப்படி அசல் ஆவணங்களை வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மற்றொரு மனுவில், 2012-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றில் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்களின் விவரங்களை, தங்களது வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களை தெரிவிக்கவும் வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் கடந்த 14-ம் தேதி நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, செந்தில்பாலாஜி தாக்கல் செய்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 19-ந்தேதி (இன்று) தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. வங்கி விவரங்களை வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் எனசெந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை 25-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 40-வது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story