எஸ்.புதூர் ஒன்றியத்தில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு


எஸ்.புதூர் ஒன்றியத்தில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2023 6:45 PM GMT (Updated: 1 Oct 2023 6:46 PM GMT)

எஸ்.புதூர் ஒன்றியத்தில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை தூர்வாரிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்

கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

எஸ்.புதூர் ஒன்றியம் மலையும், மலை சார்ந்த பகுதியாகவும், விவசாயம் பிரதான தொழிலாகவும் இருந்து வருகின்றது. இந்த ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் புழுதிபட்டி-பொன்னமராவதி நெடுஞ்சாலை உள்பட பல்வேறு ஊராட்சி சாலைகள் உள்ளன.

இந்த சாலைகளின் இருபுறமும் மழை நீர் செல்ல கால்வாய்கள் இருப்பது வழக்கம். இந்த கால்வாய்கள் வழியாக வயல்வெளிகள் மற்றும் காடுகளில் இருந்து வரும் மழைநீர் சேர்ந்து கண்மாய்களை வந்து அடையும். தற்போது இந்த கால்வாய்கள் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கட்டிடங்கள், ஆக்கிரமிப்பு, கட்டிட கழிவு, முறையான பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்வாய்கள் இருந்த தடம் இல்லாமல் மாறி வருகின்றது.

மழைநீரை சேமிக்க

இதன் காரணமாக கண்மாய்களுக்கு செல்ல வேண்டிய மழைநீர் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் அவல நிலை காணப்படுகிறது. மேலும், மழைநீர் கண்மாய்க்கு வந்து சேராத நிலை உள்ளதால் எஸ்.புதூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கும் முன்பாக அரசு மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி கண்மாய்களில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், சாலையோர கால்வாய்களை சீரமைத்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றியும் மழைநீரை முறையாக கண்மாயில் சேமிக்க வழிவகை செய்யவேண்டும் என்று கூறினர்.


Next Story