குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2022 6:45 PM GMT (Updated: 1 Oct 2022 6:46 PM GMT)

திண்டிவனத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் நகராட்சி கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆணையர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பெதுமக்கள் பிரச்சினை குறித்து பேசினர். இதில் திண்டிவனத்தில் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து அந்தந்த பகுதிகளில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் தொட்டிகளை உடனடியாக அமைக்க வேண்டும். மழையால் சேதம் அடைந்த தரை பாலங்களை விரைந்து சரி செய்ய வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும், தெரு நாய்களை பிடிக்க வேண்டும், பழுதடைந்த தெரு மின்விளக்குகளை உடனடியாக அகற்ற வேண்டும். முகாம் அமைத்து வரி பாக்கியை வசூலிக்க வேண்டும். 2-வது வார்டில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. திண்டிவனம்-செஞ்சி பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். இதை கேட்டறிந்த நகராட்சி தலைவர் மற்றும் ஆணையர் ஆகியோர் கவுன்சிலர்கள் தெரிவித்த பிரச்சினைகள் விரைவில் சரி செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். தொடர்ந்து பேசிய நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திண்டிவனம் பகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி சரி வர நடைபெறவில்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு உதவ வேண்டும் என்றார்.


Next Story