திருப்பத்தூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் ஒன்றியகுழு கூட்டத்தில் வலியுறுத்தல்


திருப்பத்தூர் பகுதியில்  சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் ஒன்றியகுழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:46 PM GMT)

திருப்பத்தூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சேதமடைந்த மின்கம்பங்கள்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியகுழு தலைவர் சண்முகவடிவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி, பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, காலைமகள், பாக்கியலட்சுமி, சகாதேவன், ராமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவுன்சிலர்கள் சகாதேவன், ராமசாமி ஆகியோர் கூறுகையில், மேலயான்பட்டி, குறிஞ்சி நகர் மற்றும் வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதை மாற்றி அமைக்க கோரி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மின்துறை அலுவலர்களிடம் வலியுறுத்தி இதை செயல்படுத்த வேண்டு என்று பேசினர். இதற்கு பதில் கூறிய சேர்மன் சண்முகவடிவேல், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் வலியுறுத்தப்படும் என்றார்.

வனத்துறை அனுமதி

கவுன்சிலர்கள் பழனியப்பன், ராமசாமி கூறுகையில், வேலங்குடி முதல் மகிபாலன்பட்டி வரையும், வேலங்குடி முதல் கொண்ணத்தான்பட்டி வரையும், பூலாம்பட்டி முதல் கருமிச்சான்பட்டி வரையும் உள்ள பகுதிகளில் சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெற்று சாலை அமைத்து தரவேண்டும் என்றனர்.

இதேபோன்று வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வடக்கூர் முதல் திருக்களம்பூர் பகுதி வரை உள்ள சாலையை புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் கேட்டுக்கொண்டார். இதற்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார். முடிவில் மேலாளர் ரமேஷ் பிரசாத் நன்றி கூறினார்.


Next Story