எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்


எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர்
x

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சீரமைக்கப்படாததால் வீணாக தண்ணீர் கடலுக்கு சென்று கலக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த அணைக்கட்டின் வலதுபுறம் உள்ள 4 மதகுகள் உடைந்தது. இதனால் அணைக்கட்டில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ரூ.51 கோடி மதிப்பில் அணைக்கட்டு சீரமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் அதற்கான பணிகள் இது வரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மழைவெள்ளத்தால் சாத்தனூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டத்தை கடந்து தற்போது தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பின்பு எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு நேற்று வந்தது. ஆனால் அங்கு அணைக்கட்டு சீரமைக்கப்படாததால், தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் வலதுபுறமுள்ள மதகுகள் மூலம் எரளூர் வாய்க்கால் வழியாக பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் வழியாக சாத்தனூர், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம்தவிழ்ந்தபுத்தூர், ஓரையூர், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும், இடது புறமுள்ள மதகுகள் மூலம் ஆழங்கால் வாய்க்கால் வழியாக சாலாமேடு, சாலமடை, கொளத்தூர், பானாம்பட்டு, ஆனாங்கூர், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம், சிறுவந்தாடு, வளவனூர் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் வழியாக கண்டமானடி, கண்டம் பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். இந்த ஏரிகள் நிரம்புவதன் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு சேதமடைந்துள்ளதால், மதகு வழியாக மேற்கண்ட ஏரிகளுக்கு தற்போது தண்ணீர் செல்லவில்லை. மாறாக அந்த தண்ணீர் தற்போது யாருக்கும் பயனின்றி வீணாக கடலில் சென்று கலக்கிறது.

பருவமழை

தமிழகத்தில் விரைவில் பருவமழை தொடங்கவுள்ளது. அந்த சமயத்தில் வரும் தண்ணீரையும் சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் விவசாயத்திற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story