எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை


எலக்ட்ரீசியன் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2023 7:45 PM GMT (Updated: 3 Jan 2023 10:35 AM GMT)

ஓமலூர் அருகே 'பைக் ரேஸ்' சென்றவர்களை தட்டிக்கேட்டதில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

ஓமலூர் அருகே 'பைக் ரேஸ்' சென்றவர்களை தட்டிக்கேட்டதில் ஏற்பட்ட தகராறில் எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சாலைமறியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'பைக் ரேஸ்' மோதல்

ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பழையூர் அய்யம் பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்ரம், மோகன்குமார், கார்த்திக், கோகுல், லித்தேஷ் ஆகியோர் 'பைக் ரேஸ்' சென்றனர்.

சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கும், இங்கும் வேகமாக சென்று வந்தனர். இதைக்கண்ட பாகல்பட்டி செங்கானூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதர் (வயது 26) என்பவர் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த விக்ரம் தரப்பினர் ஸ்ரீதரை சரமாரியாக அடித்ததுடன் உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் சாவு

இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஓமலூர் போலீசில் ஸ்ரீதரின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம், மோகன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதர் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.

சாலைமறியல்

பின்னர் அவர்கள் கொலைக்கு காரணமான மேலும் 4 பேரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மதியம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். விக்ரம், மோகன்குமாரை தொடர்ந்து மேலும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு ஸ்ரீதரின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை வழக்காக மாற்றம்

இதற்கிடையே ஸ்ரீதர் இறந்ததை தொடர்ந்து அந்த வழக்கு அடிதடி வழக்கில் இருந்து கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டது. மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட ஸ்ரீதர், தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்தது தொடர்பாக விக்ரம் தரப்புக்கும், ஸ்ரீதர் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இதற்கிடையே 'பைக் ரேஸ்' சென்றவர்களை கண்டித்த ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story