சிவகங்கை அருகே விறுவிறுப்பாக நடந்த மஞ்சுவிரட்டு போட்டி காளைகள் முட்டியதில் 41 பேர் காயம்


தினத்தந்தி 12 March 2023 6:45 PM GMT (Updated: 12 March 2023 6:47 PM GMT)

சிவகங்கை அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 41 பேர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை அருகே விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 41 பேர் காயம் அடைந்தனர்.

மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே உள்ள டி.புதூரில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி கடந்த 5-ந் தேதி நடப்பதாக இருந்தது. அப்போது சிவகங்கை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்ததால் இந்த மஞ்சுவிரட்டு போட்டி 12-ம் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை டி.புதூர் கண்மாய் பொட்டலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 380-க்கும் அதிகமான காளைகள் கலந்து கொண்டன. 40 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர்.

போட்டியின்போது தொழுவத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

அப்போது காளைகள் முட்டியதில் மேலச்சாலூரை சேர்ந்த பிரசாந்த் (வயது 22), பொன்னம்பட்டியை சேர்ந்த மனோஜ் (18), பையூரை சேர்ந்த சுப்பையா (56), பழனிவேல் (28), சரத் (28), கதிர்வேல் (18), சரவணன் (27), துரை (32), விக்னேஷ் (32) உள்பட 41 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கிருந்த டாக்டர் கேசவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடி சிகிச்சை அளித்தனர். இதில் பலத்த காயமடைந்த 9 பேர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்த காளை

இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சிவகங்கை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்த மஞ்சுவிரட்டின் போது தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று மிரண்டு ஓடி அருகில் இருந்த கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. அதை தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக மீட்டனர்.


Next Story