மாசி திருவிழா எதிரொலி:தேனி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
மாசி திருவிழா எதிரொலியாக தேனி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், பூதிப்புரம், வாழையாத்துப்பட்டி, மற்றும் சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி, மரிக்குண்டு, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ, கனகாம்பரம், செண்டுப்பூ, செவ்வந்தி, ரோஜா போன்ற பூக்கள் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் விளைச்சலாகும் பூக்கள் தேனி, சீலையம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் மாசித்திருவிழா நடக்கிறது. மேலும் மார்க்கெட்டுகளில் பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி தேனி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை விவரம் வருமாறு:-
மல்லிகை பூ ரூ.1,000, ஜாதிப்பூ ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை, முல்லைப்பூ ரூ.1,500, சம்பங்கி ரூ.300, செவ்வந்தி ரூ.200, அரளி ரூ.200, கோழிக்கொண்டை ரூ.80, பட்டன்ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.