வாடிப்பட்டி அருகே அதிகாலையில் விபத்து: லாரி மீது கார் மோதி 2 பேர் பலி- குலதெய்வ கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்


வாடிப்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

மதுரை

வாடிப்பட்டி


காரில் புறப்பட்டனர்

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 55). வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் முகவராக பணி செய்து வந்தார். இவர் நேற்று புரட்டாசி சனிக்கிழமை அமாவாசைக்காக பல்லடத்தில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதற்காக வாடகை காரில் அதிகாலை 4 மணிக்கு மதுரையிலிருந்து கருப்பசாமி, அவரது மனைவி தனலட்சுமி(50), மகள் சீதாலட்சுமி(20) ஆகியோர் புறப்பட்டனர். மதுரை தோப்பூரைச் சேர்ந்த பால்பாண்டி(50) காரை ஓட்டினார்.

வாடிப்பட்டி அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நகரி என்ற இடத்தில் காலை 4.30 மணிக்கு கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

2 பேர் சாவு

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கருப்பசாமியும், கார் டிரைவர் பால்பாண்டியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்களின் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த தனலட்சுமி, சீதாலட்சுமி ஆகியோருக்கு வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி, ஏட்டு சுந்தரபாண்டி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story