குப்பைகளுடன் பாசி படர்ந்து அலங்கோலமான ராமர் தீர்த்த தெப்பக்குளம்


குப்பைகளுடன் பாசி படர்ந்து அலங்கோலமான ராமர் தீர்த்த தெப்பக்குளம்
x

ராமேசுவரத்தில் குப்பைகளுடன் பாசி படர்ந்து ராமர் தீர்த்த தெப்பக்குளம் அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது. இதனை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் குப்பைகளுடன் பாசி படர்ந்து ராமர் தீர்த்த தெப்பக்குளம் அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது. இதனை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீர்த்த கிணறு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ளே 22 தீர்த்தக்கிணறுகள் அமைந்துள்ளன. இவை தவிர ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் சுமார் 108 தீர்த்த கிணறுகள் மற்றும் தெப்பக்குளங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலோடு சேர்ந்த நகர் காவல் நிலையம் எதிரே உள்ள ராமர் தீர்த்த தெப்பக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ராமர்தீர்த்தம் தெப்பக்குளம் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் மிகவும் அசுத்தமான நிலையில் காட்சியளித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில், குப்பை உள்ளிட்டவைகள் தீர்த்த குளத்தில் மிதந்தபடி அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

மேலும் தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் உள்ள மண்டபமும் வர்ணங்கள் பொலிவிழந்தும் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூவர், படிக்கட்டுகளில் பாசிபிடித்தும் அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

பல மாநிலங்கள் மற்றும் பல ஊர்களில் இருந்து ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வரும் பக்தர்கள் ராமர் தீர்த்த தெப்பக்குளம் வந்து அந்த தண்ணீரை தலையில் தெளித்து விட்டு செல்கின்றனர். ஆனால் தற்போது தெப்பக்குளம் குப்பைகளாகவும் பாசிப்படர்ந்தும் அலங்கோலமாக காட்சி அளித்து வருவதால் தெப்பக் குளத்தை காணவரும் பக்தர்கள் முகம்சுளித்தபடி மிகுந்த மன வேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.

கோரிக்கை

எனவே இதுகுறித்து ராமேசுவரம் திருக்கோவில் நிர்வாக அதிகாரிகள் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த நகர் காவல் நிலையம் எதிரே உள்ள ராமர் தீர்த்த தெப்பக்குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தெப்பக்குளத்தை சுத்தம் செய்வதற்கும் மற்றும் மைய மண்டபம் சுற்றுச்சுவர் படிக்கட்டுகள் புதிய வர்ணம் அடித்து புதுப்பொலிவு பெற செய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும் ராமேசுவரத்தை சேர்ந்த பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story