குப்பைகளை அகற்ற வேண்டும்


குப்பைகளை அகற்ற வேண்டும்
x

குப்பைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தி கோரிக்கை விடப்பட்டது.

குறைபாடு

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் யூனியன் ஆணையாளர்கள் அன்புச்செல்வி, ரத்தினவேலு, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கேசவன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்

கூட்டத்தில்கவுன்சிலர் பத்மாவதி பேசியதாவது:- கிராம பகுதிகளில் உடல்நலக் குறைபாடு மற்றும் விபத்துகளில் சிக்கியவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு செல்லும்போது அவர்களின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.

எனவே ஒன்றிய கவுன்சிலர்கள் மருத்துவமனையுடன் தொடர்பு கொள்வதற்கு ஏதாவது ஒரு டெலிபோன் நம்பரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வீணாக சென்று கொண்டுள்ளது. எனவே தண்ணீரை தேவைப் படும்போது பயன்படுத்து வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாத ஊதியம்

கவுன்சிலர் நதியா, மதகுபட்டியில் முழுநேரமும் பயன்படும் வகையில் ஆம்புலன்ஸ் கொண்டுவர வேண்டும். மேலும் அளவா கோட்டையில் இருந்து கீரணிப்பட்டி வழியாக மதகுபட்டிக்கு காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ- மாணவிகள் பள்ளிக்கு சென்றுவர வசதியாக பஸ் இயக்க வேண்டும்.

கவுன்சிலர் அழகர்சாமி, எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு மாத ஊதியம் வழங்குவது போல ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் மாதம் ரூ. 5 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும்.

துணைத் தலைவர் கேசவன், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாணியங்குடி ஊராட்சி பகுதியில் வருகிறது. மருத்துவமனை முன்பு அதிக அளவு குப்பைகள் கிடைக்கிறது. சுகாதார வளாகம் உள்ளது. எனவே குப்பை களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அன்புச்செல்வி பேசியதாவது:- 2021-22-ம் ஆண்டில் 30 சதவீத பணிகள் குடிநீர் பணிகளாக நிறைவேற்றப்பட்டன. தற்போது குளியல் தொட்டி கட்டுவது, ஆழ்குழாய் அமைப்பது போன்ற பணிகளை செய்யக்கூடாது என்று அரசு அறிவுரை கூறி உள்ளது. எனவே அரசின் அறிவுரைப்படி பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை முன்பு கிடக்கும் குப்பைகளை அகற்ற ஊராட்சி மன்றத்தில் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story