துரை.வைகோ பேச்சு


துரை.வைகோ பேச்சு
x

தி.மு.க.வுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற பிம்பத்தை பா.ஜனதாவினர் உருவாக்குகின்றனர் என்று மயிலாடுதுறையில் துரை. வைகோ கூறினார்.

மயிலாடுதுறை

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதில், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

பின்னர் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார். துணைப் பொதுச்செயலாளர் திருவிடைமருதூர் முருகன், மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, மாநில நிர்வாகிகள் அழகிரி, செந்தில்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்று பேசினார். இதில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தளபதி ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

ம.தி.மு.க.வுக்கு சரிவு

கூட்டத்தில் துரை வைகோ பேசியதாவது:-

வைகோ தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக செய்த தொண்டு, அவரது உழைப்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படம் இங்கு திரையிடப்பட்டது. அவர் 29 ஆண்டுகளாக தனியாக கட்சி தொடங்கி ஆற்றிய பணியை பார்த்து வைகோ போன்ற தலைவர்களை பயன்படுத்த தவறிவிட்டோமே என்று மக்கள் ஆதங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ம.தி.மு.க.வுக்கு சரிவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். தொண்டர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிம்பத்தை உருவாக்குகின்றனர்

எனக்கு நேரடி அரசியலுக்கு வர விருப்பமில்லை. இயக்க தோழர்களும், நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் காரணமாகவே முழுநேர அரசியலுக்கு வந்தேன். அனைத்து நிதியையும் வைத்திருக்கும் மத்திய அரசு உணவுப் பஞ்சம் ஏற்படும், அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுவது மருத்துவரே, நோயாளியிடம் நீ சாகப்போகிறாய் தயாராக இருந்துகொள் என்று கூறுவதை போன்று உள்ளது.

தி.மு.க.வுக்கு அடுத்ததாக தாங்கள்தான் என்ற பிம்பத்தை பா.ஜனதாவினர் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு உள்ள ஆதரவு வருகிற நாடாளுமன்ற தேர்தலின்போது தெரிய வரும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story