பெண்களை அச்சுறுத்தும் போதை ஆசாமிகள்
திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கள்சந்தை,
திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் போதை ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் கூட்டம்
திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் இருந்து குளச்சல், கருங்கல், அழகியமண்டபம், மணவளக்குறிச்சி, தக்கலை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் இந்த பஸ்நிைலயம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், தொழிலாளர்கள் என கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் வாகனங்கள் பஸ் நிலையம் உள்ளே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குளச்சல் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது வந்து அத்துமீறி நுழையும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
போதை ஆசாமிகள்
இந்த நிலையில் தற்போது தினசரி மாலை வேளையில் மது பிரியர்கள் மிகுந்த போதையில் பஸ் நிலையத்தின் உள்ளே பெண்கள், மாணவிகள் நிற்கும் பகுதியில் அரைகுறை ஆடையுடன் மயங்கி கிடக்கிறார்கள். சில நேரங்களில் பெண்களை அச்சுறுத்தும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனை கண்டு பொதுமக்கள் முகம் சுழித்தப்படி செல்கிறார்கள்.
ஆகவே போைத ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திங்கள்சந்தை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் புற காவல்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.