நடைபாதையின் குறுக்கே படுத்திருந்த போதை ஆசாமி - திருப்பூரில் பரபரப்பு


நடைபாதையின் குறுக்கே படுத்திருந்த போதை ஆசாமி - திருப்பூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 July 2024 2:59 AM GMT (Updated: 4 July 2024 7:51 AM GMT)

போதைப்பழக்கத்திற்கு எதிரான எண்ணம் மக்களிடம் அதிகரித்துள்ளது.

திருப்பூர்,

தமிழகத்தில் விஷ சாராயத்தால் பல உயிர்கள் பறிபோன கள்ளக்குறிச்சி சம்பவம் அனைவர் மனதை விட்டும் நீங்கா வடுவாக உள்ளது. இதன் எதிரொலியாக போதைப்பழக்கத்திற்கு எதிரான எண்ணம் மக்களிடம் அதிகரித்துள்ளது. குடி, குடியை கெடுக்கும் என்பது பல நேரங்களில் விஸ்வரூபம் எடுக்கும் போது மட்டும் இது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருந்தாலும், ஒவ்வொரு ஊர்களிலும் போதையால் மதிமயங்குபவர்கள் பாதைகளில் படுத்து உருளும் சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் டாஸ்மாக் கடைகளின் அருகிலும், பஸ் நிலையங்களிலும் போதை ஆசாமிகள் சாலையில் படுத்து கிடப்பார்கள்.

இந்த நிலையில், நேற்று மாலை நேரத்தில் ஒருவர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்லும் நடைபாதையில் படுத்து கிடந்தார். கண்கள் கிறங்கியவாறு இவர் இருந்ததற்கு போதை காரணமா? என்பது தெரியவில்லை. ஆனால் யாரும் நடந்து செல்ல முடியாதபடி நடைபாதையின் குறுக்காக படுத்து உருண்டு கொண்டிருந்தார். இதனால் மாலை நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பெண் ஊழியர்கள் அச்சத்துடன் சென்றனர்.

நடைபாதையை பயன்படுத்த முடியாமல் பலரும் ரோட்டில் நடந்து சென்றதால் வாகனங்கள் செல்லவும் இடையூறு ஏற்பட்டது. இவ்வழியாக ஏராளமானோர் சென்ற போதிலும் அவர் எந்த சலனமும் இன்றி படுத்து கிடந்தார். உச்சபட்ச அதிகாரம் கொண்ட கலெக்டர் அலுவலகத்திலேயே ஒருவர் இப்படி படுக்க முடிகிறதே என பலரும் புலம்பியபடி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story