செம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி
செம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார்.
செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜன் (வயது 61). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்து பண்ணையில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர், வழக்கம்போல் டிராக்டரில் தோட்டத்துக்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது பாதையின் குறுக்கே கேபிள் வயர் மற்றும் மின்சார வயர் சென்றது. இதனால் டிராக்டரை நிறுத்திவிட்டு சோலைராஜன் அதன்மீது ஏறி, கம்பால் கேபிள் மற்றும் மின்சார வயரை மேலே தூக்கிவிட முயற்சித்தார்.
அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜன் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சோலைராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சோலைராஜனுக்கு முத்துலட்சுமி (60) என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.