கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை - அன்புமணி ராமதாஸ்


கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை - அன்புமணி ராமதாஸ்
x

கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை சேமிக்க திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்று அரியலூரில் நடைபயணம் தொடங்கிய அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

நடைபயணம்

சோழர் நீர்ப்பாசன திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 2 நாட்கள் விழிப்புணர்வு எழுச்சி நடைபயணத்தை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தை இன்று காலை அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். பின்னர் மக்கள் மத்தியில் சோழர் நீர்ப்பாசன திட்டத்தின் சிறப்பு, அதை நிறைவேற்ற வேண்டிய நோக்கம் குறித்து உரையாற்றினார்.

அதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சோழர்கள் காலத்தில் அரியலூர் மாவட்டம் மிகவும் செழுமையாக இருந்தது. இடைக்காலத்தில் ஏரிகள் எல்லாம் தூர்ந்து, வாய்க்கால்கள் அனைத்தும் காணாமல் போனதால், இன்று வறண்ட மாவட்டமாக மாறி உள்ளது. இந்த மாவட்டத்தை வளம் சேர்க்க டாக்டர் ராமதாஸ் கடந்த 30 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார்.

சோழர் பாசன திட்டம்

சோழர் கால பாசன திட்டத்தை மீண்டும் அரசு கையில் எடுக்க வேண்டும். ஏரிகளை தூர் வாருவது, கொள்ளிடத்தில் தடுப்பணைகளை கட்டுவது, கால்வாய்களை மீட்டெடுத்து, காவிரி ஆற்றில் இருந்தும், கொள்ளிடம் ஆற்றில் இருந்தும் நீரை அரியலூர் மாவட்டத்திற்கு கொண்டு வருவதுதான், இந்த சோழர் பாசன திட்டம்.

அந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளை வெட்டினார்கள். செம்பியன் மாதேவி ஏரி, கரைவெட்டி ஏரி, பொன்னேரி போன்ற ஏரிகள் எல்லாம் இந்த மாவட்டத்தில் இருக்கிறது. ஆனால், அவை நீரின்றி தூர்ந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுக்க வேண்டும் என்று நடைபயணம் மேற்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இந்த திட்டத்தை அரசு அறிவித்து நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

நிதி ஒதுக்கீடு செய்யவில்லை

இதற்கு மொத்த செலவு ரூ.2,700 கோடி ஆகும். அதனை அரசு ஒதுக்கி, இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் 3 இடத்தில் தடுப்பணைகளை கட்ட வேண்டும். குறிப்பாக தூத்தூர் பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நான் மேற்கொண்டுள்ள நடைபயணம் என்பது முதல் கட்டம்தான். இதற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடக்கும். தர்மபுரி-காவிரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நடைபயணம் மேற்கொண்டேன். அது குறித்த ஆய்வுகள் நடத்தப்படும் என்று சட்டமன்றத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலக்கிறது. அதை தடுத்து தண்ணீரை தேங்கி வைப்பதற்கு எந்த திட்டங்களும், திராவிட கட்சிகளின் 55 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. எனவே காவிரி, கொள்ளிடம் ஆற்றில் ஆங்காங்கே 70 தடுப்பணைகளை கட்ட வேண்டும். அதன்மூலம் 70 டி.எம்.சி. நீரை நாம் மிச்சப்படுத்தி இருக்கலாம். என் தாய்க்கு பின்னர் காவிரி தாயை நான் வணங்குகிறேன். காவிரி ஆற்றை பாதுகாக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற சோழர் பாசன திட்டங்களை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story