விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
x

அரசு கிட்டங்கி திறந்த வெளி பகுதியில் இருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமாகி வரும் நிலையில் விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரை

திருமங்கலம்,

அரசு கிட்டங்கி திறந்த வெளி பகுதியில் இருந்த நெல் மூடைகள் மழையில் நனைந்து சேதமாகி வரும் நிலையில் விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

நெல்மூடைகள் சேதம்

திருமங்கலம் கப்பலூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழகத்தில் திறந்த வெளியில் நெல் மூடைகள் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் நெல் மூடைகள் நனைந்து சேதம் அடைந்தன. மேலும் நெல்மணிகள் முளைந்து வீணாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மழைக்காலங்களில் நெல்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவது குறித்தும், கொள்முதல் செய்த நெல்களை மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நாகை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிப்படைந்தனர். விவசாயிகளை பாதுகாக்க உணவுத்துறை அமைச்சர் தவறிவிட்டார் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. ஆகவே தான் நாங்கள் இந்த உண்மை நிலையை அறிய நெல் சேமிப்பு கிடங்குகளில் ஆய்வு செய்து வருகிறோம்.

தார்ப்பாய் எங்கே?

தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தமிழக அரசின் மெத்தன நடவடிக்கை காரணமாக 5 ஆயிரம் நெல் மூடைகளுக்கு மேல் மழையில் நனைந்து முளைத்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நெல் இருப்பு மையங்களில் இதே நிலைதான் உள்ளது. இதை நாங்கள் உணவுத்துறை அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமி தேவையில்லாத அறிக்கை வெளியிடுகிறார் என கூறுகிறார். எந்த ஊரில் நெல் நனைந்திருக்கு என்று கேட்கிறார். அவருடைய ஊருக்கு அருகில் உள்ள மதுரை கப்பலூரில் நனைந்து கிடைக்கிறது அத்துடன் மூடைகளில் இருக்கும் நெல்மணிகள் முளைத்து உள்ளது. விவசாயிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பில் 60 ஆயிரம் தார்ப்பாய் வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் எந்த விவசாயிக்கு தந்தார்கள் என தெரியவில்லை. கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நெல் இந்த அளவுக்கு நெல்மணிகள் முளைத்து பாதிப்பு ஏற்படவில்லை. நெல்மூடை இருப்பிற்கு ஏற்ப தார்ப்பாய் கொடுத்து பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story