தி.மு.க. முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்தி உள்ளனர்


தி.மு.க. முப்பெரும் விழாவை   மாநாடு போல் நடத்தி உள்ளனர்
x

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இணைந்து தி.மு.க. முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்தி உள்ளனர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

விருதுநகர்


அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இணைந்து தி.மு.க. முப்பெரும் விழாவை மாநாடு போல் நடத்தி உள்ளனர் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தி.மு.க. ேகாட்டை

விருதுநகரில் நேற்று நடந்த தி.மு.க. முப்பெரும் விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நான் முதல்-அமைச்சர் ஆன பின்னர் அதிகப்படியாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன். அந்த அரசு நிகழ்ச்சிகளில் கட்சி கொடி கட்ட வேண்டாம் என்று நம்முடைய பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக தெரிவித்து வருகிறேன். இதனால் பலரும் என் மீது வருத்தப்பட்டார்கள்.

அந்த வருத்தத்தை போக்ககூடிய வகையில் தி.மு.க. கொடி பட்டொளி வீசி பறக்கிறது. கோட்டையில் நான் மூவர்ண கொடியேற்ற காரணமான இருந்தது இந்த இருவண்ண கொடி. அந்த கொடிக்கு நான் எனது வணக்கத்தை செலுத்த விரும்புகிறேன்.

விருதுநகர் என்பது எல்லோரும் குறிப்பிட்டதை போல் இது தி.மு..க.வின் கோட்டை. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி கூட்டங்களை நடத்திய போது இந்த மாவட்டத்தின் செயலாளர்களாக இருக்கிற சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் எனக்கு ஒரு உறுதி மொழியை அளித்தார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிற 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்போம் என்று கூறினர். அவர்கள் கூறியது போல் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக 6 தொகுதியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

மருது சகோதரர்கள்

சுயமரியாதை இயக்கத்தின் கோட்டை இந்த விருதுநகர். சுயமரியாதை இயக்கத்தின் 3-வது மாநாட்டை தந்தை பெரியார் இங்கேதான் நடத்தினார். முகவை மாவட்டத்தில் இருந்து புதிய மாவட்டமாக விருதுநகர் உருவானபோது மாவட்ட செயலாளராக இருந்தவர் அண்ணன் தங்கப்பாண்டியன். தி.மு.க. இளைஞரணிக்கு நான் பொறுப்பாளராக இருந்து வழிநடத்த வேண்டும் என்று எனக்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர். இதை நான் என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.

விருதுநகர் மாவட்டத்தை கட்சி ரீதியாக இரண்டாக பிரித்தபோது தெற்கு மாவட்ட செயலாளராக சாத்தூர் ராமச்சந்திரனும், வடக்கு மாவட்ட செயலாளராக தங்கம்தென்னரசுவும் கடமையாற்றி வருகிறார்கள். இருவரும் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார்கள். மருதுசகோதரர்களை போல செயல்பட்டு வருகிறார்கள். மருதுசகோதரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் என்றால் இவர்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார்கள்.

பெருமையாக பேசும் வகையில்

இந்த முப்பெரும் விழாவை எல்லோரும் பெருமையாக பேசக்கூடிய அளவில் மாநாடு போல் நடத்திக்காட்டி உள்ளனர். அவர்கள் இருவரையும் எல்லோர் சார்பிலும் நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



Next Story