காவிரி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தலையிடுவது குறித்து முடிவு செய்யப்படும்-தொல்.திருமாவளவன் பேட்டி


காவிரி விவகாரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தலையிடுவது குறித்து முடிவு செய்யப்படும்-தொல்.திருமாவளவன் பேட்டி
x

காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் எவ்வாறு தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தொல்.திருமாவளவன் கூறினார்.

அரியலூர்

காவிரி விவகாரம்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் அக்காள் பானுமதியின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்திய திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் இதில் எவ்வாறு தலையிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். கர்நாடகா மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் காவிரியில் அணை கட்டுவது உள்ளிட்ட முயற்சிகளில் அம்மாநில அரசு ஈடுபடுகிறது. அது அவர்களின் மாநில நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்கிற முயற்சி. அதேபோல் நாம் தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரச்சினையை அணுகுவோம். இருமாநில மக்களின் நலனுக்கு ஏற்ப காவிரி மேலாண்மை வாரியம் தலையிட்டு உரிய தீர்வு எடுக்க வேண்டும். மத்திய அரசு இதனை சரியான முறையில் அணுகி சுமூக தீர்வு ஏற்படுத்தி தரும் என நம்புவோம்.

இந்தியை திணிக்கக்கூடாது

இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற கருத்து அடிப்படையில் பா.ஜனதா அரசு ஒரே மொழி, ஒரே மதம் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் இந்தி மொழியை பேச வேண்டும். எதிர்காலத்தில் நாட்டில் அனைவரும் இந்தி பேசக்கூடியவர்களாக மாற வேண்டும். இந்தி பேசும் மக்களின் கலாசாரத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பின்பற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் அவர்கள் இயங்கி வருகிறார்கள். எனவே இந்தி மொழியை யாரும் எதிர்க்கக்கூடாது என கூறியுள்ளார்.

யார் மீதும் இந்தியை திணிக்கக்கூடாது என்பதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயக அணுகுமுறைகளை ஒருபோதும் பா.ஜனதா அரசு மதிப்பதில்லை. அரசமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அமித்ஷாவின் ஏதேச்ச அதிகாரத்தை காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story