தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்பு-ஆர்.எஸ்.பாரதி பேட்டி


தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்பு-ஆர்.எஸ்.பாரதி பேட்டி
x

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

புதுக்கோட்டை

மேகதாது அணை

புதுக்கோட்டையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நான் ஆடு என்று அண்ணாமலையை பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் ஆட்டுக்குட்டி என ஒத்துக்கொள்கிறாரா?. அண்ணாமலை அருவா பிடித்த கை என்று கூறினால், நான் வக்கீல் என்பதால் எனது கை பேனா பிடித்தது. பேனாவை தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது.

கோவையில் டி.ஐ.ஜி. தற்கொலை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை என்பது தேவையில்லை. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் திருப்பூரில் கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டதை சி.பி.ஐ. விசாரித்து வருகிறதில், இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த பணம் யாருடையது என கண்டுபிடிக்கவில்லை.

கவர்னர் விவகாரம்

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நெடுஞ்சாலை துறையில் ஊழல் தொடர்பான வழக்கில் அவரது விருப்பப்படியே நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை, மாநில போலீசாரே விசாரிக்கட்டும் என கூறிவிட்டோம். அதனால் மாநில போலீசாரே விசாரிப்பார்கள். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடே அவருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும். ஆலோசனை பெறுவதற்காக அவர் டெல்லி சென்றுள்ளரா? அல்லது வரும் போது அவர் கவர்னரா வருவாரா? என்பது தெரியவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உருவான தி.மு.க. கூட்டணி அதன்பின் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகராட்சி தேர்தல் என 4 தேர்தல்களில் வெற்றி பெற்று இதுவரை இல்லாத வகையில் வரலாறு படைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story