இடைத்தேர்தலில் 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது - ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு


இடைத்தேர்தலில் 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது - ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
x

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்விகரமான வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகளை பெற்று தனது டெபாசிட் தொகையை தக்க வைத்து கொண்டார். மீதமுள்ள 75 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

இந்த நிலையில், சென்னை, கோடம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொண்டர்கள், தலைவர்கள் என்று அனைவரும் ஒன்றிணைந்துதான் செயல்படுகிறோம். காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல தான் அவர்களுக்குத் தெரிகிறது. எங்களின் கட்சி வேகமாக உள்ளது. எழுச்சியாக உள்ளது. வரும் காலங்களில் வீறுகொண்டு மகத்தான வெற்றியை பெறும் நிலையில் தான் கட்சி உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் பார்த்து ஆளும் திமுக அரசு மிகப்பெரிய பயத்தில் இருந்தது. இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் இது போன்று அவர்கள் பயந்தது கிடையாது. 350 கோடி செலவு செய்து போலியான வெற்றியை திமுக பெற்றுள்ளது. ஆளும் அரசின் பணம் பாதளம் வரை பாய்ந்துள்ளது.

அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களை அடைத்து வைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளனர். எங்களை பார்க்காமல் இருப்பதற்கு பணம் கொடுத்துள்ளனர். இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம்.

இதை எல்லாம் தாண்டி 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் இது தோல்விகரமான வெற்றி தான். நாங்கள் தான் உண்மையாக வெற்றியாளர்களே தவிர, திமுக கிடையாது என்றார்.


Next Story