மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு


மன்னார்குடி நகரசபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு
x

வீடு புகுந்து தன்னை தாக்கிய தனது கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி நகர சபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்ககள் சிலரும், அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினரும் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி:

வீடு புகுந்து தன்னை தாக்கிய தனது கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மன்னார்குடி நகர சபை கூட்டத்தில் இருந்து தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்ககள் சிலரும், அ.தி.மு.க.-அ.ம.மு.க.வினரும் வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகரசபை கூட்டம்

மன்னார்குடி நகரசபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் சோழராஜன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் கைலாசம் , ஆணையர் சென்னு கிருஷ்ணன் ,மேலாளர் மீரா மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . அதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

புதிய பஸ் நிலைய பணிகள்

பாரதிமோகன் (தி.மு.க.):-மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பஸ் நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி தலைவர் அறிவித்தார்.இதற்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பரிந்துரை செய்த டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்செல்வி (அ.ம.மு.க.):- செட்டித் தெருவில் எடைபோடும் நிலையத்திற்கு வரும் கனரக வாகனங்களால் காந்தி ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குண்டும், குழியுமான சாலை

செந்தில்செல்வி (அ.ம.மு.க.): கீழ இரண்டாம் தெருவிற்கு தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். நகராட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடுவதை கவுன்சிலர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்..

மீனாட்சி (தி.மு.க.):- சியாமளா கோவில் தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.

புகழேந்தி (தி.மு.க.): கே.எஸ.எஸ்.பூங்காவிற்கு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ரவிசந்திரன்(தி.மு.க.):-மேலராஜ வீதியில் காந்தி சிலை முதல் பெரியார் சிலை வரை உள்ள இரு பாதைகளுக்கும் நடுவில் சென்டர் மீடியன் அமைத்து தர வேண்டும்.

கழிவுநீர் வாய்க்கால்

ஐஸ்வர்யா லட்சுமி (தி.மு.க.):-கடந்த 30 ஆண்டு காலமாக பராமரிக்கப்படாமல் இருந்த கழிவு நீர் வாய்காலை சுத்தப்படுத்தி கொடுத்த நகராட்சி தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெங்கடேஷ் (தி.மு.க.):- முன்பு இயங்கி வந்த நகராட்சி கூட்ட அரங்கிற்கு முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் பெயர் வைக்கப்பட்டிருந்தது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கூட்ட அரங்கத்திற்கும் அவரது பெயரையே வைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சோழராஜன்(தலைவர்):-மன்னார்குடியில் ரூ.26 கோடி 76 லட்சம் மதிப்பீட்டில் புதிய நவீன பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீபாவளி முடிந்தவுடன் தொடங்கப்படும்.

தி.மு.க. பெண் கவுன்சிலர் வெளிநடப்பு

நகரசபை தலைவர் பேசிக் கொண்டிருந்த போது தி.மு.க. கவுன்சிலரான கலைவாணி என்பவர் எழுந்து நேற்று முன்தினம் என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கிய தி.மு.க. கவுன்சிலர் பாண்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறி விட்டு கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.

அவருக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரும், அ.தி.மு.க. அ.ம.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 18 பேர் வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story