தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி; 4 பேர் கைது


தனியார் நிதி நிறுவன ஊழியரிடம்  வழிப்பறி; 4 பேர் கைது
x

சேர்ந்தமரம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி; 4 பேர் கைது

தென்காசி

சுரண்டை:

சங்கரன்கோவிலில் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர் கோபிராஜ். இவர் சுரண்டையில் உள்ள தனியார் நிதி நிறுவன கிளையிலிருந்து கடந்த 17-ந்தேதி சங்கரன்கோவிலில் உள்ள கிளைக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கே.வி.ஆலங்குளம் கிராமம் அருகே காட்டுப் பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் கோபிராஜை வழிமறித்து நிறுத்தி பணத்தை வழிப்பறி செய்தனர். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சேர்ந்தமரம் போலீஸ் (பயிற்சி) துணை சூப்பிரண்டு கிரிஸ் யாதவ் தலைமையில், கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் குருவிகுளத்தைச் சேர்ந்த முருகன் மகன் மாரியப்பன் (வயது 29), செந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற செயின்குமார் (32), தளவாய்புரத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி மகன் திருமலைக்குமார் என்ற மின்னல்குமார் (27), ஆட்கொண்டார்குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் அய்யனார் (26) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கோபிராஜிடம் பணத்தை வழிப்பறி செய்து அந்தப் பணத்தை மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டனர். அந்த பணத்தை (பயிற்சி) துணை சூப்பிரண்டு கிரிஷ் யாதவ் தலைமையில் போலீசார் கைப்பற்றி 4 பேரையும் கைது செய்தனர்.

கைதான 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.




Next Story