பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு - தமிழக அரசு உத்தரவு


பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 21 Sep 2024 7:21 AM GMT (Updated: 21 Sep 2024 8:39 AM GMT)

பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல, விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலும் முறைகேடுகள் நடந்திருப்பதை கல்வித்துறை கண்டுபிடித்துள்ளது. அதாவது, முறைகேடாக மாணவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முறைகேடுகளை களையும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிக்கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ். தரத்தில் உள்ள அதிகாரிகள், இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த அதிகாரிகள், அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆய்வு செய்வர். மாதத்திற்கு ஒரு முறையாவது பொறுப்பு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டம் தோறும் ஆய்வுசெய்து, அறிக்கையை 5-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story