மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது


மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது
x

கரூர் மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு வருகிற 10-ந்தேதி 2 மையங்களில் நடக்கிறது.

கரூர்

தேர்வுக்குழு கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள வட்டார கல்வி அலுவலர் தேர்வு நடைபெறுவதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு காந்திகிராமத்தில் உள்ள கரூர் புனித தெரசா மகளிர் மேல்நிலைப்பள்ளி, வெண்ணைமலையில் உள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தடையில்லா மின்சாரம்

கரூர் மாவட்ட கல்வி அலுவலக வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் பெறப்பட்டு தேர்வு முடிவுற்ற பின்னர் தேர்வு மையத்தில் இருந்து பெறப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாள் கட்டுகளை பாதுகாப்பான முறையில் அஞ்சல் துறை வசம் ஒப்படைக்கும் வரை 24 மணி நேரமும் காவல்துறையினரால் பாதுகாவலர்கள் வசதி ஏற்பாடு செய்திட வேண்டும்.

2 தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். மேலும், கரூர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு வினாத்தாள் கட்டுகள் பெறப்படும் நாளில் இருந்து விடைத்தாள் கட்டுகள் அஞ்சலக அலுவலர்கள் வசம் ஒப்படைக்கும் நாள் வரை தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும். போக்குவரத்துத்துறை தேர்வு நாட்களில் தேர்வு நேரமான காலை 9 மணிக்கு முன்பாக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்திட வேண்டும்.

முன்னேற்பாடு பணிகள்

தீயணைப்புத்துறையினர் மாவட்ட கல்வி அலுவலக வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகள் பெறப்பட்டவுடன் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தை ஆய்வு செய்து தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை நேரடியாக பார்வையிட்டு தேர்வு மையங்கள் தேர்வு நடத்துவதற்கு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

பாதுகாப்பான முறையில்...

தேர்வு மையங்களில் மின்விளக்கு, மின்விசிறி, குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு பணிகளை நேரடியாக பார்வையிட்டு தயார் நிலையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

மேலும், அஞ்சல் துறை வட்டார கல்வி அலுவலர் தேர்வு முடிவுற்ற உடன் கரூர் மாவட்ட கல்வி அலுவலக வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து ஓ.எம்.ஆர். விடைத்தாள் கட்டுகளை பெற்று பாதுகாப்பான முறையில் ஆசிரியர் தேர்வு வாரிய வழிகாட்டுதலின் படி ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.


Next Story