மாணவர்களுக்கு நோட்டு-புத்தகங்கள் வினியோகம் தீவிரம்


மாணவர்களுக்கு நோட்டு-புத்தகங்கள் வினியோகம் தீவிரம்
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:45 PM GMT)

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

விருதுநகர்

சிவகாசி,

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிவகாசி அச்சகங்கள்

சிவகாசி பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் ஆண்டு தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான நோட்டு புத்தகங்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கடந்த காலங்களில் குறைந்த அளவு அச்சகங்கள் இருந்ததால் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது சிவகாசியில் அச்சகங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அச்சடிக்கும் நேரம் குறைந்து வருகிறது. ஒரு அச்சகத்தில் தற்போது குறைந்தது 10 மணி நேரம் மட்டுமே பணி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

விலை உயர்வு

நோட்டு புத்தகம் தயாரிக்க தேவையான காகிதம், அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்த ஆண்டு நோட்டு புத்தகங்களின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது. அதேபோல் உற்பத்திக்கு தேவையான மின்சாரம் தட்டுபாடு இன்றி கிடைத்துள்ளதாக தெரிகிறது. போதிய ஆட்கள் இல்லாத நிலையில் உற்பத்தியின் அளவு சற்று பாதித்துள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்க முடிவு செய்து தற்போது வெயில் தாக்கம் காரணமாக விடுமுறை நாட்களை அதிகப்படுத்திய காரணத்தால் சிவகாசியில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் தேவையான நோட்டு புத்தகங்கள் சீரான முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நேரடி ஆர்டர்கள் வந்து இருப்பதாக தெரிகிறது. அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் நோட்டு, புத்தகங்களும் சிவகாசியில் உள்ள சில அச்சகங்களில் தயார் செய்யப்பட்டது.


Next Story