தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்


தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்
x

தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றம்

திருவாரூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டது. . மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

மருத்துவ கழிவுகள்

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் அருகில் நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரங்களில் ஆஸ்பத்திரிகளில் சேரிக்கப்படும் குப்பைகள், மருத்துவ கழிவுகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது. இந்த மருத்துவ கழிவுகள் தூர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இந்த கழிவுகள் தீயிட்டு கொளுத்துவதால் தேசிய நெடுஞ்சாலையில் புகைமண்டலத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்படும் சம்பவமும் நடைபெற்று வந்தது.

ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு கட்டும் துணி ரோல், ஊசி போடும் சிரஞ்சுகள் போன்ற மருத்துவ கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதார சீர்கேடும் நிலவி வந்தது. இதுகுறித்த செய்தி படத்துடன் கடந்த 17-ந் தேதி 'தினத்தந்தி' நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தண்டலை ஊராட்சி நிர்வாகம் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்தியது.

எச்சரிக்கை பலகை

இந்த இடத்தில் குப்பை கழிவுகள் கொட்டாத வகையில் தடுப்பு வேலி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு குப்பைகள் கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறி குப்பைகளை கொண்டு வரும் வாகனங்கள் பிடிக்கப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்படுவதுடன், பிடிக்கப்படும் வாகனங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த தண்டலை ஊராட்சிக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story