தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

நோய் தொற்று பரவும் அபாயம்

பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு சென்னை பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பயணிகள் அப்பகுதியில் திறந்தவெளியிலும், சாலை ஓரத்திலும் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறைகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜன், பெரம்பலூர்.

பாதியில் நிற்கும் வடிகால் வாய்க்கால் பணி

பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமம் நல்லெரி தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை பெய்யும் போது மழை நீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி தற்போது பாதியில் நிற்பதினால், மழை பெய்யும் போது தண்ணீர் வெளியேற வழிஇன்றி பாதி அளவில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நாரணமங்கலம்.

நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மகளிர் விளையாட்டு விடுதி செயல்படுகிறது. இதன் முன்பு சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அப்படியே விடப்படுவதால், குப்பைத் தொட்டி நிரம்பி குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீதேவிமனோகர், பெரம்பலூர்.

பயனற்ற குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகில் ஒன்றிய பொதுநிதி 2022-2023-ல் இருந்து ரூ.8 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆன நிலையில் தற்போது பழுதடைந்து கடந்த 2 மாதங்களாக பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆசைத்தம்பி, பீல்வாடி.


Next Story