அழியும் நிலையில் உள்ள கோவில்களை மேம்படுத்தலாம்


அழியும் நிலையில் உள்ள கோவில்களை மேம்படுத்தலாம்
x

ஒவ்வொரு மாவட்ட அளவிலும் தலைசிறந்த வல்லுனர்களை கொண்டு அழியும் நிலையில் உள்ள கோவில்களை மேம்படுத்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் ஆலோசனை கூறினார்.

விழுப்புரம்

இந்து சமய அறநிலையத்துறையின் விழுப்புரம் மண்டலம், விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து கல்வெட்டு மற்றும் கோவில் கலைப்பயிலரங்கம் இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்லவர் காலத்து வரலாற்று சிறப்புடைய கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் மண்டகப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கோவில் அழியா சிறப்புகளை கொண்டது. கற்கள், செங்கற்கள், மணல் இல்லாமல் இக்கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இன்றைய பொறியாளர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், அக்காலத்திலேயே சிறப்பாக கட்டப்பட்டிருக்கிறது. விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாக்குண்டார் ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு முன்மாதிரிக்கோவில் என்று கூறலாம். இதை எடுத்துரைக்கும் வகையில் இதுபோன்ற பயிலரங்கம் நடத்தப்படுவது பாராட்டுக்குரியது இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்களை மேம்படுத்த

சிறப்பு அழைப்பாளராக இந்திய தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் செய்த நல்ல காரியங்களில் ரெயில்வேயை தொடங்கியது, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையை தொடங்கியது போன்றவற்றை குறிப்பிடலாம். கல்வெட்டை படியெடுத்து படிப்பது மட்டுமல்ல, மொழியையும் படிக்க வேண்டும். தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பேச்சு வடிவில் மொழி இருந்தாலும் எழுத்து வடிவில் இல்லை. எனவே எழுத்தோடு மொழியையும் சேர்ந்து படிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கலெக்டர் தலைமையில் தலைசிறந்த வல்லுனர்களை கொண்ட பாரம்பரியக்குழு உள்ளது. அந்த குழுவின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் அழியும் நிலையிலுள்ள கோவில்களை மேம்படுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துரை. ரவிக்குமார் எம்.பி., லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் வீரராகவன், விழுப்புரம் அரசு கல்லூரி பேராசிரியர் ரங்கநாதன் உள்ளிட்ட பேராசியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையச்செயலாளர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் விழுப்புரம் மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story