குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல்


குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல்
x
தினத்தந்தி 27 Aug 2023 10:30 PM GMT (Updated: 27 Aug 2023 10:30 PM GMT)

தேவாலா அருகே நெல்லிக்கண்டி, தேக்கம்பாடி பகுதியில் மின் இணைப்பு வழங்காததால், குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

தேவாலா அருகே நெல்லிக்கண்டி, தேக்கம்பாடி பகுதியில் மின் இணைப்பு வழங்காததால், குடிநீர் திட்டங்களை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குடிநீர் வசதி

கூடலூர் தாலுகா தேவாலா அருகே நெல்லிக்கண்டி, தேக்கம்பாடி ஆதிவாசி கிராமங்களில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள நிலையில், அப்பகுதி ஆதிவாசி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நெல்லிக்கண்டி, தேக்கம்பாடி பகுதியில் பல லட்சம் செலவில் குடிநீர் கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதில் மின்மோட்டார்கள் பொருத்துவதற்கு மின் இணைப்பு வேண்டி சம்பந்தப்பட்ட துறையிடம் நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் விண்ணப்பித்தது.

மின் இணைப்பு

ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்க வில்லை. இதனால் குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆதிவாசி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது தென்மேற்கு பருவமழையும் சரிவர பெய்யவில்லை. இதனால் மழை பொய்த்து போனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் சூழல் ஏற்படக்கூடும்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, 2 கிராமங்களில் குடிநீர் திட்டங்கள் தொடங்கியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஏற்கனவே குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வரும் நிலையில் பல லட்சம் செலவு செய்தும் குடிநீர் திட்டம் நிறைவடையாமல் உள்ளது. இதனால் பணம் வீணாகும் நிலை உள்ளது. எனவே, மின் இணைப்பு வழங்கி குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story