பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர் குடும்பத்துடன் தர்ணா


பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர் குடும்பத்துடன் தர்ணா
x

பணியிட மாற்றத்தை ரத்து செய்யக்கோரி பெரம்பலூரில் மின்வாரிய ஊழியர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு நேற்று காலை 4 பேர் தர்ணாவில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன் (வயது 48) என்பவர் தனது மனைவி அஞ்சலை, மகன் இன்பராஜ், மகள் மகேஸ்வரி ஆகியோருடன் தர்ணாவில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெரம்பலூர் கோட்டம், எசனை மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கம்பியாளராக பணிபுரிந்து வந்த கணேசனை கடந்த ஏப்ரல் மாதம் மின்சார பிரச்சினை தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எசனை உதவி மின் பொறியாளர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் கணேசனை அரியலூர் மாவட்டம், தேளூர் மின்வாரிய அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பிரச்சினையில் மேற்பார்வை பொறியாளர் உடனடியாக தலையிட்டு பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக கணேசன் தனது குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறிது நேரம் கழித்து கணேசன் தர்ணாவை கைவிட்டு இது தொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகளை சந்திக்க சென்று விட்டார்.


Next Story