தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு


தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு
x

அகோர வீரபத்திரர் சாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை

அகோர வீரபத்திரர் சாமி கோவில்

விராலிமலை தாலுகா, பேராம்பூர் கிராமத்தில் குதிரைக்கார தங்கையா என்கிற அகோர வீரபத்திரர் சாமி மற்றும் வீர மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்நது வீர மகாலட்சுமி அம்மனுக்கு கோவில் முன்பு திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அகோர வீரபத்திரர் மற்றும் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தேங்காய் உடைத்து வழிபாடு

தொடர்ந்து நேற்று பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர். அப்போது வீரபத்திரர் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி தேங்காயை உடைத்தார்.

பின்னர் பேய் பிசாசு உள்ளிட்ட கெட்ட ஆவிகள் அண்டியிருக்கும் நபர்களை கோவில் முன்பு நிறுத்தி கோவில் பூசாரி அவர்களை சாட்டையில் அடித்து கெட்ட ஆவிகளை விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கருப்பர் கோவிலில் கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story